விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய
கத்தி படம் தீபாவளியன்று வெளியானது. படம் வெளியானது முதல் தமிழ்நாடு
முழுவதும் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் தியேட்டர்களில் ரசிகர்கள்
வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 450 தியேட்டர்களுக்கு மேல் கத்தி திரையிடப்பட்டது. அத்தனை தியேட்டர்களிலும் கத்தி
ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியான புதன்
கிழமையில் மட்டும் தமிழ்நாட்டு தியேட்டர்களில் மட்டும் 12.2
கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இது விஜய்யின் சாதனை வசூலாக இருந்த
துப்பாக்கி வசூலையும் முறியடித்திருக்கிறது. கேரளாவில் 1.65
கோடியையும், கர்நாடகாவில் 1.55 கோடியையும் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 6 கோடியும்
வசூலித்துள்ளது.
தியேட்டர் அதிபர் பலி
சென்னை புறநகர் பகுதியான
கிருஷ்ணாபுரத்தில் உள்ள லட்சுமி தியேட்டரில் நேற்று (அக் 23) அதிகாலை
முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். காலைக் காட்சிக்கு டிக்கெட்
கிடைக்காதவர்கள் மதிய காட்சிக்காக அங்கேயே காத்திருந்தனர். காலைக் காட்சி முடிந்து
ரசிகர்கள் வெளியே வந்தனர். வெளியே காத்திருந்த ரசிகர்கள் டிக்கெட் கவுண்டருக்கு
முண்டியடித்து உள்ளே ஓடினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
அப்போது
அங்குள்ள கண்ணாடி கதவின் அருகில் நின்று கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்திக்
கொண்டிருந்தார் தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் (வயது 74).
முண்டியடித்த கும்பல் மோதி கண்ணாடி கதவு உடைந்து சிதறி கிருஷ்ணன் மீது
விழுந்தது. இதில் அவரது உடலின் பாகங்களை கண்ணாடி துண்டுகள் கிழித்தன. அவர் ரத்த
வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருநின்றவூர்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment