‘அடைமழை’ பொழியும்
ஐப்பசியை நினைத்தாலே உள்ளத்தில் ஆனந்தம் ஊற்றெடுக்கும். அடைமழையினால் வீட்டிற்குள்
அடைந்து கிடக்கும் சுகம் தனி
என்றாலும், ஐப்பசியில்
வரும் தீபாவளி பண்டிகையே
நம் எல்லோரின் மனக்கண் முன்னால் வந்து நின்று மனதில்
மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். கல்வி மற்றும் வேலை நிமித்தமாக ஆங்காங்கே சிதறிக்
கிடக்கும் குடும்பம் ஒன்றிணையும் நாள் அல்லவா! வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளி, நம் இந்தியக்
குடும்பங்களின் பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும்
உதாரணமாகத் திகழும் திருநாள்.ஜோதிடவியலைப் பொறுத்தவரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றும் இம்மாதம் அழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது, தனது வலிமையை இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. கண்ணுக்குத் தெரியும் கடவுளாம் சூரியன் வலிமை இழந்திருக்கும் இந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய பண்டிகையா, இது முரண்பாடாக உள்ளதே என்ற எண்ணம் தோன்றுகிறது அல்லவா? விளக்கமாகக் காண்போம்.
தீபாவளியில் இருந்தே துவங்குவோம். தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. வட இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு வீட்டிற்கு வீடு தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடுவர். ராவண வதத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ராமபிரானை வரவேற்கும் விதமாக மக்கள் தம் இல்லங்களில் இவ்வாறு விளக்கேற்றி வைப்பதாக ஐதீகம்.
நரகாசுர வதம் பற்றி நாம் அறிந்ததே.
பூமாதேவியின் புதல்வனான நரகாசுரன் தன் தாயாரைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தினைப் பெற்றவன். அவனது கொடுமையால் தவித்த மக்களைக் காக்கும் பொருட்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவியான பாமாவுடன் நரகாசுரனோடு யுத்தம் செய்ய கிளம்புகிறார். பெண்களும் போருக்குச் செல்ல லாம் என்று பெண்ணினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சியாளன் ஸ்ரீ கிருஷ்ணன். நரகாரசுர யுத்தத்தின்போது கிருஷ்ணன் மூர்ச்சையானது போல் நடிக்க, அந்த நேரத்தில் பூமாதேவியின் அம்சமான பாமாவினால் அழிக்கப்படுகிறான் நரகாசுரன்.
சாகும் தறுவாயில் அவன் கேட்ட வரத்தின்படி அவனது இறப்பு நாளை தீபாவளிப் பண்டிகையாக உலகத்தார் கொண்டாடுகின்றனர். ஐப்பசி அமாவாசைக்கு மறுநாளில் இருந்து ஆறுநாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது கந்தசஷ்டி விழா. சூரபத்மனின் பெரும்படையோடு முருகப்பெருமான் போர்புரிந்த ஆறு நாட்களும் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆறாவது நாளான சஷ்டி அன்று சூரபத்மனின் வதம் நிகழ்கிறது. இவ்வாறாக ராவணன், நரகாசுரன், சூரபத்மன் என்று அசுரர்கள் அழிக்கப்பட்ட மாதம் இந்த ஐப்பசி என்பதால் இது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே அமைந்துள்ளது.
கந்த சஷ்டிக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. அந்த நாளில் தாயாகிய சந்திரன், புத்திரகாரகன் ஆகிய குருவின் வீட்டில் அதாவது தனுசு ராசியிலோ அல்லது அவரது வீட்டினைக் கடந்து மகர ராசியின் முதல் பாகத்திலோ அமர்ந்திருப்பார். குருவின் பலத்தினைப் பெறுவதோடு சூரியனுக்குரிய நட்சத்திரமான உத்திராடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் அது. “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?’’ என்ற பழமொழியை எண்ணிப் பாருங்கள். அதன் பொருள் இதுதான்: சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் உள்ள பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும்.
அதாவது, சஷ்டி விரதம், தோஷத்தை நீக்கி குழந்தை பாக்கியத்தைத் தரும் என்று பெரியவர்கள் விளக்கமளிப்பார்கள். அதனால் தான் கந்த சஷ்டியில் இருந்து விரதத்தினை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஒரு வருட காலம் பிரதி மாதம் வரும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள்ளாக கடுமையான தோஷம்கூட நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டிவிடும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இதனாலேயே திருச்செந்தூர், புத்திர பாக்கியத்
தினைத் தரும் குருவின் ஸ்தலமாகவும் விளங்குகிறது. தீபாவளி முடிந்தவுடன் நம்மவர்கள் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று பரஸ்பரம் நலம் விசாரிப்பர்.
தீபாவளி நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் ஸ்நானம் செய்வர். அன்றைய தினம் நம் இல்லந்தோறும் கங்கை பிரவாகிப்பதாக ஐதீகம். இதற்காக முதல் நாள் இரவே அடுப்பினை சுத்தம் செய்து, சாணத்தால் மெழுகி, கோலம் போட்டு வைத்திருப்பர். வெந்நீர் தவலைக்கு மஞ்சள், குங்குமம் இட்டு நீர் நிரப்பி வைப்பர். இன்றளவும் ஒரு சிலர் இல்லங்களில் இதனை நீர்பிடிக்கும் பண்டிகை என்ற பெயரில் தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் பெண்கள் கொண்டாடுவர்.
அடுத்ததாக துலா ஸ்நானம். பஞ்சாங்கத்தில் கூட ஐப்பசி மாத முதல் நாள் அன்று துலா ஸ்நான ஆரம்பம் என்றும் கடைசி நாளில் கடைமுகம் என்றும் குறிப்பிட்டிருக்கும். துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் புண்ணிய நதியான காவிரியில், கங்கா தேவி பிரவாகிப்பதாக புராணங்கள் உரைக்கின்றன. தான் செய்த பாவங்களைக் கழிக்க எல்லோரும் கங்கையில் நீராடுகின்றனர். உலகத்தாரின் பாவ மூட்டைகளைச் சுமக்கும் கங்காதேவி அதிலிருந்து விடுபட்டு தன்னைப் பொலிவு ஆக்கிக்கொள்ள வேண்டி காவிரிக்கு வந்து ஸ்நானம் செய்யும் காலமே இந்த ஐப்பசி மாதம்.
கங்கா தேவியே தனது பாவத்தினைப் போக்கிக்கொள்ள காவிரியை நோக்கி ஓடிவருகிறாள் என்றால் நமது காவிரியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா? ஆக இந்த ஐப்பசி மாதத்தில் என்றாவது ஒரு நாள் நாமும் காவிரிக்கரைக்குச் சென்று துலாஸ்நானம் செய்து கங்கை- காவிரி இரண்டிலும் ஒருசேர நீராடும் பாக்கியத்தை அடைவோம். ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவதைக் காண்கிறோம். உத்தரகாரண ஆகமம் எனும் நூலில் அன்னபூஜா படலத்தில் இதற்கான விதி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
பித்ருகாரகன் ஆன சூரியன் நீசம் பெற்றிருக்கும் காலத்தில் மாத்ருகாரகன் சந்திரன் பௌர்ணமி நாளில் முழு நிலவாக ஒளிவீசும் போது அன்னத்தினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதனை பிரசாதமாக வழங்குவர். அதாவது, தந்தை வலிமை இழந்திருக்கும் காலத்திலும், தாயானவள் தன் மக்களைக் காத்து ரட்சிப்பார் என்பதே இதன் பொருள். ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார கௌரீ விரதம் கொண்டாடப்படுகிறது. நீசம் பெற்ற சூரியனோடு தாயான சந்திரன் ஐப்பசி அமாவாசை நாளில் இணைகிறாள்.
அன்று கேதார கௌரீ விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதி, சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும். அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவி அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த ஐப்பசி. இப்பொழுது நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள்.
கிருஷ்ண பகவான் போரின்போது மூர்ச்சையாகிவிட்டபோதும், சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம், நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா? அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை மேற்கொண்டு வெற்றி காண்கிறாள்... ஐப்பசி மாத அமாவாசை நாளன்று வடஇந்தியர் பலரும் மகாலட்சுமி பூஜை செய்வர். இன்றளவும் நகைக்கடை அதிபர்கள் அன்றைய தினம், லட்சுமி குபேர பூஜை நடத்துவதைக் காண்கிறோம். துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சந்திரன்.
லாப ஸ்தானாதிபதி சூரியன். தொழில் மற்றும் லாப ஸ்தானாதிபதிகள் இருவரும் இணைந்து துலாம் ராசியிலே சஞ்சரிக்கும் நேரம் என்பதால் செய்யும் தொழிலில் லாபம் வேண்டி இந்த நாளில் லட்சுமி குபேர பூஜையை செய்கிறார்கள். அன்றைய தினத்திலிருந்தே புதிய கணக்கும் தொடங்குகிறார்கள். அன்னாளில் லட்சுமி தேவியை பூஜிக்க சகல ஐஸ்வரியங்களும் நம்மிடம் வந்து சேரும். ஐப்பசியில் கதிரவன் கார்மேகத்திற்குள் புகுந்துகொண்டாலும் இந்த மாதம் களையிழந்து போவதில்லை.
கார்மேகத்திற்குள் தன்னை மறைத்துக் கொள்ளும் கதிரவன் கார்முகில் வண்ணனாம் கண்ணனை எண்ணி கடுந்தவம் செய்யும் காலம் இது என்றும் பெரியோர் உரைப்பர். காலதேவனின் கடு(ட)மையினால் உண்டாகும் பஞ்சத்திற்கும், வெள்ளத்திற்கும் தன் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக பகவானை எண்ணி பகலவன் பிரார்த்தனை செய்யும் காலமே இந்த ஐப்பசி மாதம் என்பதை உணர்வோம். சூரியதேவனின் வழியில் நாமும் பகவானின் பாதத்தைச் சரணடைவோம். பசிப்பிணியில் இருந்து உலகத்தைக் காப்போம்.
No comments:
Post a Comment