Friday, October 10, 2014

ஆலமரம் திரைவிமர்சனம்

அவலை நினைத்து உரலை இடிப்பதாக சொல்வார்களே... அதுமாதிரி, அரண்மனை மாதிரி ஒரே பேய் படம் எடுக்க ஆசைப்பட்டு ஆலமரம்
படத்தை ஆரம்பித்து... அப்புறம் டிஸ்கஷனில் அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு... என்று அடியோடு சாய்திருக்கிறார்கள். பாவம்! வேரோடு விழுதுகளும் சாய்ந்திடுவது தான் ஆலமரத்தின் பெரும் பலவீனம்! கதைப்படி காதலில் தோற்றுப்போன கருத்தப்பாண்டி பேய், அந்த ஊரின் ஒதுக்குப்புறமான ஆலமரத்தில், தன் ஆயுள் முடியும் வரை தஞ்சம் புகுந்து தன் காதலியை அடைய, தன்னை கொன்றவனை தீர்த்து கட்டுகிறது கருத்தப்பாண்டி பேய். அதன்பின், அந்த ஊர்க்காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் தரும் அந்த ஆலமர பேய், ஒருகட்டத்தில் அமுங்கி போய், கதாநாயகன் கார்த்தி-ஹேமந்த், நாயகி அவந்திகாவின் காதல் கதையை நமக்கு சொல்கிறது. அந்த போரடிக்கும், பேய் அடிக்கும் கதை முடிந்ததும், அவர்களது காதலுக்கு கூட இருந்தே குழிபறிக்கும் சடையன், ஆலமர பேய் ஆவது தான் ஆலமரம் படத்தின் லாஜிக் இல்லா கரு, கதை, களம் எல்லாம். (கருத்தப்பாண்டி பேய் லாஜிக்படி, காதலன் கார்த்தி எனும் கதாநாயகர் ஹேமந்த் அல்லவா.? பேயாக வேண்டும்.?!)
இயக்குநர் எஸ்.என்.துரை சிங்கின் இயக்கத்தில், உதய் சங்கரின் ஒளிப்பதிவில், ராம்ஜீவனின் இசையில், ஹீரோ ஹேமந்த், ஹீரோயின் அவந்திகா உள்ளிட்ட சகலரும் சகட்டு மேனிக்கு நடித்து அந்த ஆலமரத்தை காட்டிலும் அதிகம் பயமுறுத்துவது தான் ஆலமரம் படத்தின் பலம், பலவீனம் எல்லாம்!
ஆக மொத்தத்தில், ஆலமரம் - ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளில் மிரட்டும் பிரமாண்ட மரம். அதன்பின் வயிற்றை புரட்டும் பட்டமரம்! செம்மையாக பட்டுட்டோம் சாமி!!

No comments:

Post a Comment