Saturday, October 18, 2014

பாபநாசம் படப்பிடிப்பில் நடந்தது என்ன? கமல் விளக்கம்

மலையாளத்தில் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார்
கமல், அவருடன் கவுதமியும் நடித்து வருகிறார். இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடந்து வருகிறது. அங்கு போலீசாக நடிக்கும் கலாபவன் மணி கமலை ஒரு டீக்கடை முன் வைத்து தாக்குவது போலவும் கமலின் மூக்கு வீங்கி அதிலிருந்து ரத்தம் வழிவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக முங்கு வீங்கி இருப்பது போன்ற காட்டுவதற்காக அவரது முக்கிற்குள் ஒரு ரப்பர் துண்டை வைத்தார்கள். தாக்குதல் காட்சி எடுத்தபோது அந்த ரப்பர் துண்டு தவறுதலாக கமல் மூக்கின் உட்புறத்திற்குள் சென்றுவிட்டது. இதனால் கமல் மூச்சு விடமுடியாமல் திணறினார். ரப்பர் துண்டு ஏற்படுத்திய காயத்தால் அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தொடுபுழாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கமலை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ரப்பர் துண்டை அகற்றி மூக்கு காயத்திற்கு சிகிச்சை அளித்தனர் சில மணி நேர ஓய்வுக்கு பிறகு கமல் மீண்டும் அதே காட்சியில் நடித்தார்.
கமல் அறிக்கை

இது தொடர்பாக கமல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சண்டைக் காட்சியில் நடித்தபோது முகத்தில் காயம் ஏற்பட்டிருப்பது போன்ற மேக் அப் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு ரப்பர் துண்டு மூச்சு குழாய்க்குள் சென்று விட்டது. அதனை மருத்துவர்கள் மேற்பார்வையில் ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. முகத்தில் ரத்த காய மேக்அப்புடன் ஆஸ்பத்திரிக்கு சென்றதால் பெரிய விபத்து போன்ற செய்தி பரவிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன். தொடர்ந்து நடித்து வருகிறேன். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment