Thursday, October 23, 2014

பூஜை திரைவிமர்சனம்

ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன்
முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''.

கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு பக்காவாக சொந்தக்காலில் வாழுகிறார் விஷால். எதிர்பாராமல் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்திக்கும் திவ்யா எனும் ஸ்ருதிஹாசன் உடன் முதலில் நட்பும், அதன்பின் காதலும் கொள்கிறார் மனிதர்.

பொள்ளாச்சியில் பெரிய மனிதர் அந்தஸ்த்துடன் வாழும் கூலிப்படை தலைவன் அன்னை தாண்டவம் எனும் வில்லன் முகேஷ் திவாரியிடம் மோதுகிறார். சொந்த பகைக்காவும், அதேநேரம் விஷாலின் குடும்பத்துடனான பெரும்பகைக்காவும் விஷாலை தீர்த்துக்கட்ட துடிக்கும் முகேஷ், விஷாலை வென்றாரா.? விஷால், முகேஷை கொன்றாரா.? எனும் அதிரடி ஆக்ஷ்ன் கதையுடன், விஷால்-ஸ்ருதியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி அதிரடியாக, அதேநேரம் லவ், காமெடி, சென்ட்டிமென்ட் என ஜனரஞ்சமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, ''பூஜை'' போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி!

வாசு எனும் வாசுதேவனாக விஷால், செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து தாயின் அன்பிற்கு ஏங்கும் காட்சிகளிலாகட்டும், ஸ்ருதிஹாசன் உடனான காதல் காட்சிகளாகட்டும், ஒற்றை ஆளாய் 30-40 ஆட்களை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சூரியுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்குவதிலாகட்டும்... அனைத்தையும் அசால்ட்டாக செய்து சக்கைபோடு போட்டிருக்கிறார். கீப்ட்-அப் விஷால்!
ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை... 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!

பரோட்டா சூரி - பிளாக் பாண்டி - இமான் அண்ணாச்சி கூட்டணி, கவுண்டமணி-செந்தில் அண்ட் கோவினரை நம் கண்முன் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறுத்துகிறது என்றால் மிகையல்ல. அதிலும் அந்த உரித்த வாழைப்பழ காமெடி செம சிரிப்பு.

விஷால் - ஸ்ருதி - சூரி அண்ட் கோவினர் மாதிரியே, போலீஸ் ஆபிசராக வரும் சத்யராஜ், விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, ரேணுகா, கெளசல்யா(பழைய கதாநாயகிகள் மீது இயக்குநர் ஹரிக்கு அப்படி என்ன ஈர்ப்போ...?), தலைவாசல் விஜய், ஜெய்பிரகாஷ், பிரதாப் போத்தன், வில்லன் முகேஷ் திவாரி உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், ''இப்படியே... என தொடங்கும் பாடல் உள்ளிட்ட 6 பாடல்களும் 'நச்' என்று இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், 'பூஜை'க்கு மாவிலை தோரணம் கட்டியிருக்கின்றன.

ஹரியின் எழுத்து-இயக்கத்தில், 'பூஜை' படம் படு ஸ்பீடாக செல்வது, இந்த தீபாவளி ரேசில், இளைய தளபதியை காட்டிலும், புரட்சி தளபதியின் படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.

ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் ''பூஜை'' - ''ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!''


No comments:

Post a Comment